"மறைக்க முடியாது தகவல்கள்! தேசிய பாதுகாப்பு என்ற வாதத்தை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்."
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை, 'தேசிய பாதுகாப்பு' என்ற போர்வையில் தன்னிச்சையாக மறுக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தின் போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 'எஸ்.எல்.என்.எஸ் கஜபாகு' என்ற கடற்படைக் கப்பலில் ஏறியது தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு முன்னர் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து இலங்கை கடற்படை தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த போதே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஏ.ஏ.எம்.ஆர். அலி என்பவரால் 2022 செப்டம்பரில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் விண்ணப்பத்தில், முன்னாள் ஜனாதிபதி கப்பலில் பயணித்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? பயணத்தின் தூரம், செலவு மற்றும் அந்தச் செலவை பொறுப்பேற்றது யார்? போன்ற விபரங்கள் கோரப்பட்டிருந்தன.
எனினும், தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி கடற்படை இந்தத் தகவல்களை வழங்க மறுத்திருந்தது. பின்னர் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு தலையிட்டு, பயணச் செலவு மற்றும் அதற்கான நிதி மூலம் தொடர்பான விபரங்களை மாத்திரம் வழங்குமாறு கடற்படைக்கு அறிவுறுத்தியது.
இதனை எதிர்த்தே கடற்படை மேன்முறையீடு செய்திருந்தது. நீதியரசர் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர மற்றும் நீதியரசர் ஆர். குருசிங்க ஆகியோர் அடங்கிய குழுவில் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
அதில், தகவல்களை மறுப்பதற்கு 'தேசிய பாதுகாப்பு' என்பது ஒரு போர்வை அல்ல. கோரப்பட்ட நிதி தொடர்பான தகவல்களால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வாறு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை கடற்படை உரிய ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தவறிவிட்டது.
வெறுமனே பொதுப்படையான கூற்றுக்களை முன்வைத்து தகவல்களை வழங்காமல் இருக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவை உறுதிப்படுத்திய நீதிமன்றம், கடற்படையின் மேன்முறையீட்டை தள்ளுபடி செய்தது.
இதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் தகவல் அறியும் உரிமை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்